Pages

Monday, October 25, 2010

சம்பந்தரின் ஒன்பதாவது பாடல்கள்

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும்! எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். என்னுடை அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர் என்பது தான் அது.

‘இது ஒரு பெரிய வேலையா?’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவரையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர்.

சொல்வளம்

ஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386இல் 17 நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தைப் பல முறை சொன்னாலும், கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பொருள் சிறப்பு

ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

11 பாடல் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை.

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா?

சிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் 9வது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணி

புராணக் கதைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் மெய்ப் பொருளை ஊகித்து அறிவது வரலாற்று ஆய்விற்கு உதவும். இந்தப் புராணக் கதையின் பின்னணி என்னவாக இருக்கக் கூடும்?

திருமால் என்பவர் தமிழ் மண்ணின் பழமையான தெய்வம். தொல்காப்பியர் காலத்தில் முல்லை நிலக் கடவுளாக இருந்தவர். சிவன் வழிபாடு மேலோங்குவதற்கு முன்பு முல்லை நிலத்தில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பரவி இருந்தது அவரது வழிபாடு. பிரமன் என்பவர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வம்.

சங்க காலத் தமிழகத்தில் மால் வழிபாடும் ஆலமர் கடவுள் (சிவன்) வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பிரமன் வழிபாடு அந்தணர் இயற்றிய வேள்விகளில் மட்டும் இருந்திருக்கக் கூடும். முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு அதற்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிவனை முழுமுதற் கடவுளாக்கும் போக்கு நிலவி வந்ததற்கான அடையாளங்களைச் சிவனுக்கு அளிக்கப்பட்ட முது முதல்வன், தொல் முது கடவுள் என்ற அடைமொழிகளிலிருந்து அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் மாலின் பிரசாதத்தை விடச் சிவனுடைய பிரசாதத்திற்குச் சிறப்பிடம் தந்தது கூறப்பட்டுள்ளது.

பிரமன், மால் ஆகிய இந்த இரண்டு தெய்வங்களின் வழிபாடும் அருகிச் சிவன் முழுமுதற் கடவுளாக மேலோங்கிய நிலையைத் தான் இப்புராணக் கதை குறிப்பதாகக் கொள்ளலாம். அம்மையார் காலத்திலேயே சிவன் சிறப்பிடம் பெற்று விட்டார் என்பது அவரது பாடல்களிலிருந்து தெரிகிறது. வேத தெய்வமான பிரமன் வழிபாடு அருகியது என்றால் சிவன் வழிபாடு வேதத்துக்கு விரோதமானது என்பது பொருள் அல்ல. வேதமும் சிவனும் இணைபிரியாதவை என்று புறநானூறும் அம்மையாரும் கூறுவதை ஒட்டிச் சம்பந்தரும் சுமார் 1000 தடவைகள் சிவனை வேதத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகிறார்.


வேதமும் புறச்சமயங்களும்

வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் மனித சமுதாய முழுமையின் நலனுக்காக மட்டுமன்றி, பிற உயிரினங்களின் நலனுக்காகவும் சேர்த்தே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றை எனக்குக் கொடு என்று தான் கேட்கின்றன.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக, தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.

அம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள்.

Wednesday, October 20, 2010

பேயார் - காரைக்கால் மேய குலதனம் - அம்மையார்

எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

ஆசை நிறைவேறாமல் அற்ப ஆயுளில் இறந்தவர்களும் தற்கொலை, விபத்து இவற்றால் இறந்தவர்களும் பேயாக மாறி உலவுகின்றனர் என்பதும், இப் பேய்கள் உருவம் இல்லாதவை என்பதும், இவை பெண்களையும் பலவீனமானவர்களையும் பிடித்துத் துன்புறுத்துகின்றன என்பதும் இன்றைய தமிழ்நாட்டு நம்பிக்கை. ஆனால் அம்மையார் கூறும் பேய்கள் வேறு வகையானவை. அவரது மூத்த திருப்பதிகம் பேய்களைப் பற்றிக் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

இறந்தவர்கள் பேயாவதில்லை. மாறாக, பேய்கள் என்பவை மனிதர் போன்ற உருவமும் அழகற்ற தோற்றமும் உடைய தனி உயிரினம். வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் கொண்டவை பேய்கள். இவற்றில் சில வாயி்ல் தீயும், சில கண்ணில் தீயும் கொண்டவை. இவற்றில் கூளி என்ற ஒரு வகை உண்டு. இவை மற்றப் பேய்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பது தெரியவில்லை.

இவை சுடுகாட்டில் வாழ்கின்றன. அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசம் உள்ளவை இவை. குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன. அது தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன தாய்ப் பேய்கள். அவை குறும்பு செய்யாமல் இருப்பதற்காக அவற்றை அச்சுறுத்தி “கொள்” என்று இசை பாடுகின்றன.

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே (பதிகம் 1-5)

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே (பதிகம் 2-10)

நம்முடைய கண்ணோட்டத்தில் தான் பேய்கள் அழகற்றவை. அவை தாம் அழகாக இருப்பதாகத் தான் கருதுகின்றன போலும். அவை மனிதப் பெண்களைப் போலவே தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் நாட்டம் கொண்டவை. கூந்தலைக் காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருக்கிறது. எரிந்து அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாக தீட்டிக் கொள்கிறது அது.

.....................................சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் (பதிகம் 2-8)

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி .................................
(பதிகம் 1-2)

அவற்றிற்கும் நம்மைப் போலவே கோபம், பயம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகள் உண்டு. மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பேய் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதும் பயந்து குதிக்கிறது. அங்கு பிணஞ்சுடு தீச் சுட்டுவிடவே, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது என்பதையும் மேற்கண்ட பாடலின் மூலம் அறிகிறோம்.

பேய்களுக்கும் துன்பம், வறுமை எல்லாம் உண்டு. ஊரில் யாரும் இறக்காத நாளில் அவை, பாவம், பட்டினி் தான். கிடைத்த நாட்களிலும் அவை நரி, கழுகு முதலானவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது. இறுதிக் கடன் செய்து மனிதர் விட்டுப் போன சோற்றை நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, இசை கூட்டுகின்றன. துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன. வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிடுகின்றன.

குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, (பதிகம் 1-4)

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின் (பதிகம் 2-7)

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து
பப்பினை யிட்டுப் பகண்டை பாட (பதிகம் 1-11)

பிணங்களை உண்டு களிக்கும் அவை உயிருள்ள மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் அவை மனிதர்களிடம் அஞ்சுகின்றன. ஒரு பிணத்தை உயிருள்ள மனிதன் என்று தவறாக நினைத்த ஒரு பேய் பயந்து போய் ஊரைக் கூட்டிய செய்தியை அம்மையார் நகைச்சுவையோடு விவரிப்பதைக் காண்கிறோம்.

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப் (பதிகம் 2-4)

பேய்கள் பற்றி அம்மையார் கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது மனித மாமிசம் தின்னும் வழக்கம் உடைய மனிதர்களைத் தான் அக்காலத்து மக்கள் பேய் எனக் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. அம்மையார் காலத்தில் உண்மையில் அத்தகைய மனிதர்கள் இருந்தார்களா? இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணங்களை ஆராய்வோம்.

பரிணாம வளர்ச்சிப் படிகளில் கீழ்நிலையில் உள்ள மீன் போன்ற சில தவிர, ஏனைய உயிரினம் எதுவும் தன் இனத்தாரின் புலாலை உண்பதில்லை. கொடிய புலி கூட மற்றொரு புலியைத் தின்பதில்லை. வளர்ச்சி நிலையில் மேல் படியில் உள்ள மனிதனுக்கு தன் இனத்தாரின் மாமிசம் இயல்பான உணவு அல்ல. வக்கிர புத்தி உடைய சிலர் எப்பொழுதேனும் அவ்வாறு உண்டிருக்கலாம். மற்ற மனிதர்களுக்கு இது அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் தரும் செய்தியாக இருக்கும். எனவே அவர்கள் இதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பர். செவி வழிச் செய்தியாக இது பரவும்போது சொல்பவரின் கற்பனையும் அதில் கலந்து பரவும். அதனால் இது பற்றிய கதைகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

டேனியல் டேபோ எழுதிய ராபின்சன் குரூசோ என்னும் புகழ் பெற்ற கதையில் கன்னிபல் எனப்படும் காட்டுமிராண்டி ஆண்கள் தங்களில் ஒருவனை அவ்வப்பொழுது கொன்று தின்பதாகக் கூறுகிறார். இது கதை எழுதியவரின் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனக் கொள்ளலாம்.

பிணம் தின்பதால் அதீதமான வலிமை பெற்ற மந்திரவாதிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. அவர்கள் பெண்களாகவே இருக்கக் காண்கிறோம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேய் மகளிர் பிணம் தின்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. இங்கு ஆண் பேய்கள் கிடையாது. இந்தப் பேய் மகளிர் அஞ்சுவதற்குரியவராக வர்ணிக்கப்பட்டாலும் அவர்கள் ஊருக்குள் புகுந்து மனிதரைத் தூக்கிச் சென்று கொன்று தின்பதாகச் சொல்லப்படவில்லை. சுடுகாட்டில் கொண்டு வைக்கப்படும் பிணங்களை மட்டுமே அவர்கள் தின்பராம். துணங்கை என்னும் கூத்தினை ஆடி மகிழ்வராம்.

அம்மையார் தான் முதன் முதலில் பேய்களின் செயல்களை எல்லாம் விவரமாக வர்ணித்தவர். பிற்காலத்தில் பேய்களைக் கதா பாத்திரங்களாக்கிப் புனையப்பட்ட பரணி என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வழிகாட்டியவர் அம்மையாரே.

அம்மையார் கூறும் பேய்களும் பெண்களே. ஒரு ஆண் பேய் கூடக் குறிக்கப் படவில்லை. குழந்தைப் பேய் என்னும் ஒரு புதிய வகையை உருவாக்கிய அம்மையார், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிணம் தின்னும் பேய் மகளிர் என்னும் கருத்துருவுக்குத் தன் கற்பனை மூலம் தாய்ப் பாசம், பயம் ஆகிய உணர்ச்சிகளைப் படைத்து விரிவுபடுத்தினார் என்பது பெறப்படுகிறது. அம்மையாரைப் பின்பற்றியே பிற்காலத்தில் வந்த ஜயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குழந்தைப் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.

119 கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால்.

அம்மையார் கொண்ட பேய்வடிவம் சுடலைப் பேய்களுக்கு உண்டான அருவருக்கத்தக்க தோற்றமும் செயல்களும் உள்ளதல்ல. மாறாக, வனப்பு நின்ற தசைப் பொதி கழிந்து, எற்பு உடம்பே ஆன, எல்லோரும் வணங்கும் பெருமை சேர் வடிவமாக இருந்தது. இறைவனின் அருகாமையை விரும்புவதில் மட்டும் தான் இவர் பேயுடன் ஒன்றுகிறார். ஈசன் பேய்களுடன் நடனமாடுகிறார் என 24 முறை கூறும் இவர் தன்னைப் பேய் என 4 முறை கூறிக் கொள்கிறார்.

அவர் தம்மைப் பேய் எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது?

பரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது. இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான்.

இவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான்.

பாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது.

அதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின.

தன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.

அப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார்.

Monday, October 18, 2010

அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம்

கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கைலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கைலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கைலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லை, கைலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வடக்கு முகமாகச் சென்றதைத் தான், கைலை நோக்கிச் சென்றதாகச் சேக்கிழார் கூறியதாகக் கொள்ள வேண்டும்.

அவர் கால் போன போக்கில் அலைந்து, செல்லும் இடங்களில் எல்லாம் இறைவன் புகழை வாய் ஓயாது உரைத்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். பலர் அவரைப் பேய் எனக் கருதி அஞ்சி ஓடினாலும் அவரைப் போற்றி ஆதரித்தோரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத் தான் அவரது பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

இறைவன் ஆலமரங்களிடையே நடனமாடுகிறான் என்ற அவரது கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுப் பரவியதால் பல ஊர்கள் ஆலங்காடு என்று பெயரிடப்பட்டன. அத்தகைய இடங்களில் அவர் அதிக நாட்கள் தங்கி இறை வழிபாடு செய்திருப்பார். அங்கு அவரால் தாக்கம் பெற்றுச் சமணம் துறந்து சைவ நெறியை மேற்கொண்டோர் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆலங்காடுகள் சைவத்தின் நாற்றங்காலாகப் போற்றத் தக்கன.

இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம், தலை ஆலங்காடு என்ற ஊர்ப் பெயர் தான். இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இது அப்பர் தேவாரம் பெற்ற தலம். இங்கு இறைவன் நடனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் இரு திருவாலங்காடுகளும் வடாரண்யம் என்று கூறப்படுகின்றன. (வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலை ஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. தலை என்ற அடைமொழி இது அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது. மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.

அம்மையார் தன் முதல் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் திருவாலங்காடு என்னும் இடத்தைக் குறிப்பிடுகிறார். தேவார ஆசிரியர்களும் பிறரும் ஒரு ஊரை வர்ணிக்கும் போது அந்த ஊரின் சிறப்பு அம்சமாக- அருகிலுள்ள ஆற்றின் பெயர், மலை, கடல், சோலைகள், மாட மாளிகைகள், அந்தணர்கள் மிகுதியாக வாழ்வது- இப்படி ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். சுடுகாட்டுச் சூழலை வர்ணித்து விட்டு இத்தகைய திருவாலங்காட்டில் எங்கள் அப்பன் ஆடுகிறான் என்று அம்மையார் காட்டும் காட்சிகள் எல்லா ஊர்ச் சுடலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. அவர் எந்தச் சுடலைக்கும் சென்றதில்லை என்பதும் மக்கள் பேசிக் கொள்வதை வைத்துத் தான் அவர் அதை விவரிக்கிறார் என்பதும், ‘நீ இரவில் தீயாடும் இடத்தை எனக்கு ஒரு நாள் காட்டுதியோ’ என்று கேட்பதிலிருந்து அறியலாம்.

மாங்காடு, மாங்குடி, புளியங்குடி, வேலங்குடி, ஆலங்குடி என்று அந்தந்த ஊரில் மிகுதியாக உள்ள மர வகையின் அடிப்படையில் ஊருக்குப் பெயரிடுவது வழக்கம் தான் என்றாலும் ஆலங்காடு எனப் பெயரிடப்பட்ட ஊர்கள் அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அவை மரத்தின் காரணமாகப் பெயரிடப்பட்டிராமல் அம்மையாருடன் தொடர்பு கொண்டமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்க இடம் ஏற்படுகிறது. நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் ஆலங்காடு என்று பெயர் பெற்ற ஊர்கள் 7 உள்ளன. அவையாவன-

ஆலங்காடு 1- அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை சாலை அருகில் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில் இல்லை. 5 கி.மீ. தொலைவில் ஆலங்குடி என்னுமிடத்தில் உள்ளது. இது முன்னாட்களில் பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கலாம்.

ஆலங்காடு 2- முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி சாலையில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அண்மைக் காலத்திய சிவன் கோவில்கள் இரண்டு உள்ளன.

ஆலங்காடு 3- தலையாலங்காடு. நாகப் பட்டினத்திலிருந்து 30 கி.மீ. மேற்கில் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது. அப்பர் பாடல் பெற்றது.

ஆலங்காடு 4- தரங்கம்பாடியிலிருந்து 30கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ளது. கோவில் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முன்னர் அரச ஆதரவு பெற்றிருந்ததாலும், தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படுவதாலும் நல்ல நிலையில், அளவிலும் பெரியதாக உள்ள இக்கோவில் திரு என்ற அடைமொழியுடன் கூடியதாக உள்ளது.

ஆலங்காடு 5- காரைக்கால்- சீர்காழி சாலையில் கருவிழந்தநாதபுரம் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது. இன்று அது பற்றி ஊர் மக்களில் எவரும் அறியவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி என்ற முதியவர் மட்டுமே இவ்வூர் இங்குள்ள சிவன் கோவிலை ஒட்டியே ஆலங்காடு எனப் பெயரிடப்பட்டது என்பதை அறிவித்தார். அவரது உறவினராகிய வேல்முருகன் என்ற இளைஞருக்குச் சொந்தமான கருப்பங் கொல்லையின் நடுவில் ஒரு சிவலிங்க பாணம் மட்டும் உள்ளது. அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆலங்காடு 6- சீர்காழி– பழையார் பாதையில் உமையாள் பதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் பெயர் அவுட்டீஸ்வரர் எனச் சொல்லப்படுகிறது. ஆலங்காட்டீஸ்வரர் என்பதன் மருவாக இருக்கலாம்.

ஆலங்காடு 7- சென்னைக்கு மேற்கில் 60 கி.மீ. தொலைவில் அரக்கோணம் சாலையில் உள்ளது. இதுவும் திரு என்னும் அடைமொழி பெற்றது. அம்மையார் இந்தத் தலத்தில் முத்தி அடைந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அம்மையார் மேற்கண்ட வரிசைப்படியான தலங்கள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக இங்கு வந்து சேர்ந்ததாகக் கருதலாம்.

மேற்கண்ட ஏழு ஊர்களில் ஐந்தாவது ஆறாவது நீங்கலாக மற்ற ஐந்தும் வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இது அம்மையார் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்படுத்துகிறது. அந்த இரண்டு மட்டும் ஏன் ஒதுங்கி உள்ளன என்பது தெரியவில்லை.

அம்மையாரின் பயணப் பாதையாக இதைக் கருதுவதில் மேலும் ஒரு தடை உள்ளது. இவற்றில் முதல் ஆறு தலங்களும் சோழ மண்டலக் கடற்கரை அருகில் அமைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அருகாமையில்- ஓரிரு நாள் நடைப் பயணத்துக்கு உட்பட்டதாக- உள்ளன. ஆறாவதாகச் சொல்லப்பட்ட ஆலங்காட்டிற்கும் ஏழாவதாகச் சொல்லப்பட்ட திருவாலங்காட்டிற்கும் இடையே சுமார் 200 கி.மீ. உள்ளது. சோழ மண்டலத்து மக்கள் அம்மையாரை வரவேற்று உபசரித்துத் தங்கள் ஊர்களுக்கு ஆலங்காடு எனப் பெயரிட்டுக் கொண்ட அளவுக்கு வடக்கே உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். இவ்விடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கக் கூடும். பல்லவர்கள் அப்பரால் போதிக்கப்படு முன் சமணர்களாகவே இருந்தனர் என்பது அறிந்த விஷயம். இங்கெல்லாம் சமணம் மிக அதிகமாக வேரூன்றி இருக்கக் கூடும்.

இந்தச் சோழநாட்டுத் திருவாலங்காட்டுக்கும் பல்லவ நாட்டு திருவாலங்காட்டுக்கும் இடையில் அமைந்துள்ள தில்லை தான் ஆடற்பெருமானின் தலைநகரமாக அம்மையாருக்குப் பின் விளங்கியது.

Thursday, October 7, 2010

அம்மையாரைத் தோற்றுவித்த சூழல்

சைவத்தைப் பொறுத்தவரை, ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாக அவதரித்தவர் காரைக்கால் அம்மையார். அவரது பெருமையை உள்ளபடி உணர, அவருக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகள் சைவம் எப்படி ஓய்ந்து கிடந்தது என்பதை அறிய வேண்டும். அம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு, அதாவது, புத்தர் மகாவீரர் இருவரும் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின் சமய, சமூக நிலையைப் பார்ப்போம்.

சமயம் அல்ல, வாழ்க்கை முறை

அப்பொழுது பாரதத்தில் இந்து சமயம் மட்டுமே இருந்தது. ஆனால் அதற்கு இந்து சமயம் என்ற பெயரும் இல்லை, வேறு எந்தப் பெயரும் இல்லை. அதற்குப் பெயரிடவேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒன்று இருந்தால் தானே அதிலிருந்து இதை வேறுபடுத்துவதற்குப் பெயர் அவசியம். அது சமயம் என்று கூட அழைக்கப்படவில்லை. தெய்வ நம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கை முறை மட்டுமே இருந்தது. இடத்துக்கு இடம் வணங்கப்படும் தெய்வங்கள் வேறுபட்டிருப்பினும், மனித சக்தியை விட மேம்பட்ட சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை அனைவருக்கும் பொதுவாக இருந்தது. இந்த வாழ்க்கை முறை தனி ஒரு மனிதரால் ஏற்படுத்தப்படவில்லை. காலம் காலமாக இந்திய சமுதாயம் சிந்தித்ததன் விளைவாக ஏற்பட்ட அனுபவ அறிவின் அடிப்படையில் அமைந்தது அது. காலம் செல்லச் செல்ல, சமுதாயத்தின் அனுபவம் முதிர முதிர, வாழ்க்கை முறையும் மாறிக் கொண்டு வந்தது

சமுதாய நலனுக்காக வர்ணப் பிரிவுகள்
கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. சமுதாயம் முழுமைக்குமாக மழை, நோயின்மை, நீண்ட ஆயுள் முதலானவற்றைக் கோரித் தெய்வங்களை வேண்டுவதற்காக ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் தோத்திரங்கள் இசைத்தும், வேள்வி இயற்றியும் மனித சமுதாய நலனுக்காகவும், பிற உயிரினங்களின் நலனுக்காகவும் இறைவனை வேண்டினர். “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும், இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும், எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று, எங்களுக்குச் செல்வம் கொடு, எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனை வேண்டுபவையாக இருந்தன அவர்கள் பயன்படுத்திய வேத மந்திரங்கள். அதனால் தான் வள்ளுவர் அவர்களை எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல, சமூகம் முழுமைக்கும் வெளிப் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுக் கலகம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் அரசக் கூட்டத்தவர் இருந்தனர். வைசியர்கள் எனப்படுவோர் விவசாயம், வாணிகம், கைத்தொழில் இவற்றில் ஈடுபட்டுச் சமுதாயம் முழுமைக்குமான நுகர் பொருட்களை உற்பத்தி செய்துவந்தனர். நான்காம் வருணத்தவர் சமுதாயம் முழுமைக்குமான குற்றேவற் பணிகளைச் செய்து வந்தனர்.

தொழிலைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம்

அதற்கு முந்திய காலங்களில் எந்தத் தொழிலில் யாருக்கு நாட்டம் உள்ளதோ அவர் அந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இருந்தது. வர்ணம் தொழிலால் தீர்மானிக்கப்பட்டதே அன்றிப் பிறப்பால் நிர்ணயிக்கப் படவில்லை. ஆனால் நாம் பார்க்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்த முறை கைவிடப்பட்டுப் பரம்பரை முறை வழக்கத்திற்கு வந்து விட்டிருந்தது. இதனால் சிலர் பரம்பரைத் தொழிலுக்குத் தகுதி இல்லாவிடினும், அதில் நாட்டம் இல்லாவிடினும் அவ்வத் தொழில்களில் திணிக்கப்பட்டிருப்பர் என ஊகிக்கலாம். இதனால் மற்றத் தொழில்களில் அதிகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் அந்தணத் தொழிலை ஆன்மிக நாட்டமும், சுயநலமின்மையும் இல்லாதார் செய்ய நேரிடின் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பு அதிகமாகவே இருந்திருக்கும்.

பொருள் நாட்டம் உடையார் வைசியத் தொழிலுக்கே பொருத்தமானவர். அத்தகையோர் அந்தணர் குலத்தில் பிறந்து விட்ட காரணத்தால் அந்தணத் தொழிலைச் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப் படும்போது வேள்வி முதலானவற்றைப் பொருளீட்டும் வழியாகக் கொள்ளத் தொடங்குவர். ஒவ்வொரு ஊரிலும் இத்தகையோரின் எண்ணிக்கை, குறிப்பிடக் கூடிய அளவுக்குப் பெருகின் மக்களுக்கு அவர்கள் செய்யும் வேள்விகளிலும், அதற்கு ஆதாரமான வேதங்களிலும் நம்பிக்கை குறைவது இயல்பே.

புத்தரும் மகாவீரரும்

இத்தகைய ஒரு காலத்தில் தான் மகாவீரரும் புத்தரும் தோன்றினர். இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆன்மிகத் துறையில் அந்தணர்கள் வழிகாட்டத் தவறிவிட்டதால் இப்பொழுது அதில் அரசர்களும் பங்கு கொள்ளத் தொடங்கினர் என்பதை இது காட்டுகிறது.

புத்தரின் வரலாறு (கி.மு.563- 483) நாம் எல்லோரும் அறிந்ததே. துன்பம் என்னவென்றே அறியாமல் சுகபோகமாக வாழ்ந்து வந்தவருக்கு 30வது வயதில் தான் வாழ்க்கையின் துன்பங்கள் கண்ணில் பட்டன. மனித வாழ்வின் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றிலிருந்து விடுபட, வேள்வி அல்லாத வழி காண முனைந்தார் அவர். பல அறிஞர்களிடமும் இது பற்றிக் கேட்டார். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்றும் கடவுளை வேண்டுவது தான் அதிலிருந்து விடுபடும் வழி என்றும் அவர்கள் கூறியது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. வேறு வழி ஒன்று இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

அவருக்குக் காலத்தால் சற்றே முந்தியவரான மகாவீரர் வாழ்க்கையும் (கி.மு.599- 527) இதே போலத் தான். அவரும் மனித குலத் துயர் தீர்க்கும் வழி தேடி 30ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறித் தவம் செய்யத் தொடங்கினார்.

கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும்

மகாவீரர், புத்தர் இருவரது கொள்கைகளின் அடிப்படையும் ஒன்று தான். “ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. உலகம் முழுவதும் இவ்வாறு காரண காரியத் தொடர்பால் பிணைக்கப்பட்டு உள்ளது” என்ற அறிவியல் கோட்பாடே அது. நாம் இன்று அனுபவிக்கும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் நாம் முன்பு செய்த நல் வினை தீவினைகளே என்று கூறும் இதுவே சமயத் துறையில் கர்மாக் கோட்பாடு எனப் பெயர் பெற்றது.

வயது வந்த மனிதன் துன்பப்படுகிறான் என்றால் அவன் செய்த எந்தத் தவறான செயலால் இது வந்தது என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். பிறக்கும்போதே சில குழந்தைகள் குறையுடன் பிறப்பதற்கும், சில வறுமையான குடும்பத்தில் தோன்றி வாடுவதற்கும், சில வசதியான பெற்றோர்களின் வாரிசாக வளர்வதற்கும் என்ன காரணம் சொல்ல முடியும்? முந்தைய பிறவியில் செய்த செயல்களின் விளைவே இது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி தெரிவதில்லை. எனவே கர்மாக் கொள்கையின் தொடர்ச்சியாகத் தோன்றியது மறு பிறவிக் கோட்பாடு.

இவை மகாவீரருக்கும் புத்தருக்கும் திடீரென்று தோன்றியது அல்ல. வாழ்க்கை என்னும் புதிர் பற்றி மனித சமுதாயம் தொடர்ந்து செய்து வரும் ஆராய்ச்சியின் விளைவே அது. அந்தக் கால கட்டத்தில் மக்கள் மத்தியில் படிப்படியாக வளர்ந்து வந்த கருத்துக்கு அவர்கள் உருவம் கொடுத்தனர்.

துன்பம் நீங்க வழி

“முற்பிறவியில் செய்த வினைகளே துன்பத்துக்குக் காரணம். பிறந்து விட்டவர் துன்பங்களை அனுபவித்துத் தான் தீர வேண்டும். வேண்டுமானால் அடுத்த பிறவியில் துன்பம் இல்லாமல் வாழ வழி உண்டு. இப்பிறவியில் அறநெறி வாழ்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பிறவாமல் இருக்கலாம்” என்று மகாவீரர் கூறினார்.

உடலை வருத்திக் கொள்வதன் மூலம் முன் வினைப் பயனை அனுபவித்து விட்டால் அது விரைவில் தீர்ந்துவிடும் என்று போதித்தார் மகாவீரர். அந்த வழியைச் சில காலம் கடைப்பிடித்துப் பார்த்த புத்தர், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று உணர்ந்து, இன்பங்களில் திளைப்பது, தன்னைத் துன்புறுத்திக் கொள்வது இரண்டுக்கும் இடைப்பட்ட நடுவழியைப் பின்பற்றலானார். மற்றபடி மகாவீரர் கொள்கைகளுக்கும் புத்தரின் போதனைகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

புத்தரின் போதனை என்ன? “வாழ்க்கை துன்பமயமானது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். நிறைவேறாத ஆசை மறுபிறவிக்குக் காரணமாகிறது. ஆசையை ஒழித்து அறநெறிப்படி வாழ்ந்தால் மறு பிறவியிலிருந்து தப்பலாம்” என்பது தான்.

கடவுட் கோட்பாடு

“நம் செயல்கள் தாம் நம் பிறப்பு, இறப்பு, இன்ப, துன்பங்களைத் தீர்மானிக்கின்றனவே தவிர உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் என்று ஒருவர் இல்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து முடிந்தவர்கள் தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்” என்றார் மகாவீரர்.

புத்தரும் கடவுள் இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. “கடவுள் உண்டா இல்லையா என்ற பிரச்சினையில் புத்தியையும் நேரத்தையும் வீணாக்காமல் பிறவா நிலை அடைவதில் செலுத்துக” என்றார் அவர்.

சமுதாய நலனா, தனி மனித முத்தியா ?

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தபின் இலக்கை மாற்றிக் கொண்டனர் மகாவீரரும் புத்தரும். ஒவ்வொரு மனிதனும் பிறவா நிலையாகிய முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர். இதனால் அவரவரது முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் பிறவா நிலை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதும், அவை சமுதாயம் முழுமைக்குமான உலகாயத நலன்களையே வேண்டின என்பதும் முன்னர்க் குறிப்பிடப்பட்டது.

பூர்வ மீமாம்சகர்

கர்மாக் கோட்பாடும், மறுபிறவித் தத்துவமும், இறை மறுப்புக் கொள்கையும் அக்கால கட்டத்தின் மனித சமுதாயச் சிந்தனை வளர்ச்சியின் விளைவு என்று பார்த்தோம். இக்கொள்கைகள் வேதத்தின் மேல் நம்பிக்கை இழந்த மகாவீரரையும் புத்தரையும் சிந்திக்கச் செய்து புதுச் சமயங்களைத் தோற்றுவித்தன என்றும் அறிந்தோம்.

வேதத்தின் மேல் நம்பிக்கையைக் கைவிடாத மக்களையும் இக்கொள்கைகள் பாதித்தன. கர்மாக் கொள்கை எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. நிரூபிக்கப்பட முடியாவிட்டாலும் கூட, மனித வாழ்வின் துன்பங்களுக்கு வேறு விளக்கங்கள் இல்லாத நிலையில், இது ஒரு பொருத்தமான விளக்கம் அளித்தது. எனவே அது வைதிகச் சமயத்தவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

வைதிகச் சமயத்தில் பூர்வ மீமாம்சகர்கள் என்ற சில சிந்தனையாளர்கள் தோன்றினர். அவர்கள் வேதத்தை நம்பி அதில் கூறப்பட்ட வேள்விகளையும் செய்தார்கள். மேலே கூறிய புரட்சிக் கருத்துகளையும் நம்பினார்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் இவ்விரண்டு துருவத்தையும் அவர்கள் எவ்வாறு இணைத்தார்கள்?

“ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு எனில், நாம் செய்யும் இந்த வேள்விக்கும் ஒரு விளைவு ஏற்பட்டே தீரவேண்டும். இந்திரனைக் குறித்துச் செய்யப்பட்ட வேள்வியின் விளைவாக மழை பொழியும் என்று வேதம் சொல்லி விட்டால் அதுவே சத்தியம். அவ்வாறே பிற சடங்குகளும் தத்தமக்கு உரிய பலன்களைக் கொடுத்தாக வேண்டும். கர்மாக்களே பலன் தரும் எனின் இறைவன் என்று ஒருவர் எதற்கு? அடுத்த ஜன்மத்தில் நாம் நல்ல பிறவி அடைந்து மகிழ்வதும் கெட்ட பிறவி அடைந்து துன்புறுவதும் இன்று நாம் செய்யும் வைதிகக் கர்மாக்களைப் பொறுத்தே உள்ளன. வேள்விகள் மூலம் மீண்டும் பிறவாத மோட்சமும் அடையலாம்” என்று அவர்கள் சிந்தித்தனர். அதற்காகப் புதிய வேள்வி முறைகளை உருவாக்கினர்.

மோட்சம் என்பதே சமண சாக்கிய மதங்களின் கண்டுபிடிப்புத் தான். வேத ஸம்ஹிதைகள் மோட்ச நிலை பற்றி எதுவும் கூறவி்ல்லை என்று பார்த்தோம். ஆனால் அதையும் அக்கால வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது. ஸம்ஹிதைக்குப் பின்னர் ஏற்பட்ட வேத இலக்கியத்தி்ல் இக்கொள்கைகள் இடம் பெற்றன. (ஸம்ஹிதை என்ற பகுதி தான் மிகப் பழமையானது. பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்ற வேதப் பகுதிகள் காலத்தால் பிற்பட்டவை.)

வேதாந்திகள்

பூர்வ மீமாம்சகர்களைத் தொடர்ந்து வைதிக சமயம் மேலும் சிந்தித்தது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரவேண்டும் எனில் இந்தப் பிரபஞ்சத்துக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை காண முயன்றனர் அவர்கள். பானை என்று ஒரு பொருள் இருந்தால் அதைச் செய்த குயவர் ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அது போல இந்தப் பிரபஞ்சத்துக்கும் படைப்போன் ஒருவன் இருக்க வேண்டுமே? இறைவன் படைத்ததாக வைத்துக் கொண்டால் இறைவன் எதைக் கொண்டு படைத்தான்? குயவருக்கு மண் உபாதான காரணமாக (துணைக் காரணமாக) இருப்பது போன்று உலகைப் படைப்பதில் இறைவனுக்கு உபாதான காரணமாக இருப்பது எது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் அந்தப் பொருளைப் படைத்தது யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவர்கள் இறைவன் வேறு ஒரு பொருளின் துணையை நாடாமல் தானே உலகாக மாறி நின்றான் எனக் கூறினர். இவர்கள் உத்தர மீமாம்சகர்கள் அல்லது வேதாந்திகள் எனப்பட்டனர். இவர்களது நூல்கள் உபநிடதம் எனப்பட்டன. இந்த உபநிடதங்கள் பெரும்பாலும் அரச குலத்தவர் போதித்ததாகவே காணப்படுகின்றன.

இறைவனே பிரபஞ்சமாக வியாபித்து நின்றான் ஆயின் இறைவன் இல்லாத இடம் இல்லை. எங்கும் நிறைந்த பொருள் ஆயின் அதற்கு அசைவு இருக்க முடியாது. அதற்கு ஒரு திட்டமான உருவமும் இருக்க முடியாது. ஒன்றுக் கொன்று பகையாகத் தோன்றும் பொருள்களும் அதுவே என்றால் அதற்கு விருப்பு வெறுப்பு இருக்க முடியாது. அதற்கு இன்ப துன்பங்களும் இல்லை. இறைவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. அவருக்குப் பெயரும் கிடையாது. எனினும் அதைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டுமே என்பதற்காக ‘பிரம்மம்’ என்றும் ‘அது’ என்றும் குறிப்பிட்டனர். அது எல்லாமாக வியாபித்து நிற்பது என்றால் “நானும் அதுவே, நீயும் அதுவே” என்று முடிவு கட்டினர்.

நானும் பிரம்மம், சூழ்ந்தது யாவும் பிரம்மம் என்று உணர்ந்து விட்டால் உலகில் பிறர் மேல் கோபம், பகைமை, பயம், கவலை ஏற்படாது. துன்பமும் இன்பமும் ஒன்றாகவே தோன்றும் அல்லவா? அந்த மனநிலையைத் தான் அவர்கள் முத்தி (உலகத் துன்பத்திலிருந்து விடுதலை) என்று குறிப்பிட்டனர்.

எனவே, “முத்தி அடைய இறக்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. இப்பொழுதே இங்கேயே அடைந்து விடலாம். வேள்வி முதலானவை செய்யத் தேவை இல்லை. அறிவினால் சிந்தித்தால் போதும்” என்றனர்.

இவ்வாறு கடவுளை நம்ப அவசியம் இல்லாமல் வேள்வி மூலம் எதையும் சாதிக்கலாம் என்று ஒரு கூட்டமும், (இவர்கள் பெரும்பாலும் அந்தணர்கள்) வேள்விகள் செய்யாமல் தியானத்தின் மூலம் இங்கேயே முத்தி அடையலாம் என்று ஒரு கூட்டமுமாகப் (இவர்கள் பெரும்பாலும் அரச குலத்தினர்) பிரிந்தது வைதிகச் சமயம். இரண்டுமே தங்கள் கருத்துகளுக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டின.

சமண சாக்கியங்களின் வளர்ச்சி

மூன்றாம், நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமன்றி முதல் இரு வர்ணத்தைச் சேர்ந்த பலருக்கும் கூட இந்த இரண்டுமே சாத்தியம் இல்லை. மோட்சம் பற்றிய கருத்துகள் உருவாவதற்கு முன்பு, தமக்கு வேண்டிய உலகியல் நலன்களைத் தெய்வத்திடம் வேள்வி மூலம் கோரிப் பெறும் கடமையை வேதியரிடம் ஒப்படைத்து விட்டுத் தத்தம் கடமைகளைச் செய்து கொண்டிருந்த மக்களுக்கு, முத்தி என்றொரு புதிய குறிக்கோள் ஏற்படுத்தப்பட்டதும், அவரவர் முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்பதும் பெரும் சுமையாக இருந்தது. எல்லோரும் வேள்வி செய்வதற்குரிய வசதியோ, வாய்ப்போ பெற்றிருக்கவில்லை என்பது தான் காரணம். வேள்வி இல்லாமல் முத்தி அடையும் உபநிடத வழியும் அவர்களுக்குப் புரியவில்லை. நானும் பிரம்மம், நீயும் பிரம்மம் என்ற கருத்து அவர்களால் புரிந்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதனால் சமண சாக்கிய சமயங்களின் வழி எளிதாக இருக்கவே பெரும்பாலான மக்கள் அதனைப் பின்பற்றத் தொடங்கினர். அவர்களில் அந்தணரும் உண்டு, அரசரும் உண்டு. ஆனால் நடுத்தர மக்களாகிய வணிகர்களே மிகுதி. கீழ்த்தட்டு மக்களோ இந்தத் தத்துவச் சிக்கல்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் தங்கள் தொல்பழம் தெய்வங்களை வணங்கி வந்தனர்.

சமண சாக்கிய சமயங்கள் ஏற்பட்ட காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கம். அப்பொழுதிலிருந்தே இச்சமயங்கள் சிறிது சிறிதாகத் தமிழகத்தில் நுழைந்திருக்க வேண்டும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய அசோகன் காலத்தில் இவை நிச்சயமாகத் தமிழகத்தில் மிகுதியாகப் பரவி இருக்கும். ஆனால் இவை உச்ச கட்டத்தை அடைந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

தமிழ்நாட்டில் களப்பிரர் காலம்

கி.பி.250க்கும் 575க்கும் இடைப்பட்ட மூன்று நூற்றாண்டு காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். இக்கால கட்டத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த களப்பிரர் என்னும் கூட்டத்தார் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு முழுவதும் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் சமண சாக்கிய சமயங்களைச் சார்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இருண்ட காலம் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், இக்காலம் பற்றி அறியப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பது தான். தமிழகத்தைப் பொறுத்தவரை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தான் பெரும் வரலாற்றுச் சான்றுகளாக இருந்து வந்துள்ளன. களப்பிரர் காலத்தில் ஏற்பட்டிருந்த இலக்கியங்கள் அனைத்தும் மறு உலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளாகவும் அறவுரைகளாகவும் உள்ளனவே தவிர மக்களின் அன்றாட வாழ்வையோ, அக்கால முக்கிய நிகழ்ச்சிகளையோ பிரதிபலிப்பனவாக இல்லை.

கல்வெட்டுகள் ஏன் ஏற்படவில்லை? பொதுவாகக் கல்வெட்டுகள் அரசரின் கொடை, வீரம் இவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடனே பொறிக்கப்பட்டு வந்துள்ளன. சமண சாக்கிய சமயத்தைச் சார்ந்த அவர்கள் பிற்கால அரசர்கள் போல பிராமணர்களுக்கும், சிவாலயங்களுக்கும், விண்ணகரங்களுக்கும் கொடைகள் அளிக்காதிருக்கலாம். விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் பள்ளிச் சந்தங்கள் அளித்திருக்கக் கூடுமே, அது பற்றி அவர்கள் ஏன் கல்லில் வெட்டவில்லை?

சங்க காலம் வரை சேர சோழ பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாக விளங்கினர். பிற்காலத்தில் இவர்களுடன் பல்லவர்களும் வலிமை பெற்றனர். தங்களுக்குள்ளே இடைவிடாமல் போர் செய்து கொண்டிருந்த இந்தத் தமிழ் வேந்தர்கள் பத்துத் தலைமுறை எப்படி அடங்கி இருக்க முடிந்தது? இவர்கள் அனைவரையும் அடக்கி வைக்கக் கூடிய அளவு வலிமை பெற்றவரா களப்பிரர்? அப்படி ஆயின் அத்தகைய வலிமையை ஏன் அவர்கள் மெய்க்கீர்த்திகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அவர்களைப் புகழ்ந்து புலவர் எவரும் பாடவில்லையே, ஏன்?

களப்பிரர் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் முற்றிலும் அழிந்து விடவில்லை. இக்கால கட்டத்தில் பாண்டியன் ஒருவன் இலங்கையில் ஆட்சி நிலை நாட்டியதையும்,சோழர்கள் இரேணாட்டில் (ஆந்திரத்தின் கடப்பை, கர்நூல் பகுதிகள்) சிறப்பாக ஆட்சி செய்ததையும் நோக்குக.

மறு உலக நாட்டம்

உண்மையில் இந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதை விட, இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தும் மனப்போக்கு ஆண்டது என்று சொல்வதே பொருந்தும்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்’ என்ற கொள்கை உடைய சமண சாக்கிய சமயங்கள் தாம் இந்தப் போக்குக்கு முக்கிய காரணம். “அறநெறியை வலியுறுத்திப் பிறவா நிலையான மறு உலக வாழ்வுக்கு ஆயத்தம் செய்வதே இவ்வுலக வாழ்வின் நோக்கம்” என்றும் “இவ்வுலக இன்பங்கள் மறு உலகப் பயணத்தைத் தடை செய்யுமாதலால் இவற்றை மறுத்து வாழ வேண்டும்” என்றும் அவை கூறின.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் காட்டியது வைதிகச் சமயம். பின்னர், சமணத்தின் தாக்கத்தால் வீடுபேறு அடைதலை நான்காவதாக ஏற்றுக் கொண்டது. அறம், வீடு இரண்டை மட்டும் வலியுறுத்தி இடைப்பட்ட இரண்டையும் கைவிட்டன புறச் சமயங்கள். மனித வாழ்வு நிலைகளிலும் இல்வாழ் பருவம், காடுவாழ் பருவம் இரண்டையும் நீக்கி மாணவப் பருவத்திலிருந்து நேரடியாகத் துறவு பூணுவதை ஊக்குவித்ததும் அவையே.

சங்க நூல்கள் உணவிலும், காதலிலும், போரிலும் காட்டும் உற்சாகம் எங்கே? வாழ்க்கையைச் சுமையாகக் கருதும் தேக்க நிலை எங்கே?

சமண சாக்கியங்கள் மதிப்பிழந்தன

சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை, பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு என்பதை முதலில் கண்டோம். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் சேர்த்தே பேசப்படுகின்றன.

ஆரம்பத்தில் இச்சமயங்கள் தமது எளிமை காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். நாளடைவில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். இன்று நம் கண் முன் உள்ள பிரச்சினைகளுக்கு வழி சொல்லாமல், எங்கோ எப்பொழுதோ அடையப் போகிற வீட்டுலகிற்கு வழி சொல்கின்றனவே இச்சமயங்கள் என்று நினைத்திருக்கக் கூடும் அவர்கள்.

மகாவீரரும் புத்தரும் அறிவு சார்ந்த தர்க்க வாதத்தின் மூலம் ஆராய்ந்து கடவுள் இல்லை என்று கூறிவிட்டதால், மக்களிடையே நாத்திகம் வேரூன்றி இருந்தது. புதிய சிந்தனை தோன்றிய காலத்தில் இந்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மோட்சம் அடைவோம் என்பதை மட்டும் எப்படிப் பகுத்தறிவின் மூலம் நிரூபிக்க முடியும் என்று அவர்களுக்கு ஐயம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

எனவே அற நெறியில் மக்களுக்கு நாட்டம் குறைந்தது. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்காமல் வாழ விரும்பிய சோம்பேறிகளுக்கும் மனம் போல வாக்கில் வாழ விரும்பிய தூர்த்தர்களுக்கும் புகலிடமாயின சமண, சாக்கியப் பள்ளிகள். இதைச் சம்பந்தரின் தேவாரம் விரிவாகக் கூறுகிறது. அதனால் புறச்சமயத்தவர் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்களாக இருந்தனர். அவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய அவர்களது போக்கினால் அலுப்படைந்தனர் மக்கள்.

அக்காலத்தில் சாமானிய மக்களுக்கு முன் நின்ற பிரச்சினை என்ன? முற்பிறப்பில் அறியாது செய்த வினைகளால் துன்புறுத்தப்படாமல் எல்லோரும் இன்பமாக வாழவேண்டும். இறந்த பின் மீண்டும் பிறவாமையாகிய முத்தி அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய வேள்வி, பிரம்மத் தியானம் போன்ற சிக்கலான வைதிக வழிகளோ, சமண சாக்கியம் கூறும் துறவு வழிகளோ அல்லாத எளிய வழி ஒன்று வேண்டும்.

இப்படியாகச் சமண சாக்கிய சமயங்கள் தம் உயர் நிலையினின்றும் வீழ்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு விடை அளிக்க முடியாமல் போகவே, சமுதாயம் முழுமையும் செய்வதறியாது திகைத்து நின்ற காலத்தில் அம்மையார் தோன்றினார்.

அம்மையாரின் குடும்பம்

காரைக்கால் பல வணிகர்களும் நெருங்கி வாழும் பதி என்கிறார் சேக்கிழார். சமண சாக்கிய சமயங்களை வணிகர்கள் தாம் ஆதரித்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே காரைக்கால் வாழ் வணிகர்களும் சமணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

தனதத்தன், நிதிபதி, பரமதத்தன், புனிதவதி என்ற வடமொழிப் பெயர்கள் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. ஸம்ஸ்கிருதம் தொல்காப்பியக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருந்து வந்த போதிலும் பொதுமக்கள் வழக்கில் அம்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்பட்டது சமணர் ஆதிக்கம் பெருகிய பின் தான். திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் வடசொற்கள் மிகுதியாக உள்ளதையும், மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்மையார் பாடல்களில் சங்க காலத்தை விட மிகுதியான வடசொற்கள் (4 சதவீதம்) உள்ளன. சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயன், சிவகதி போன்ற கூட்டுச் சொற்கள் பயன்படுத்தப் படுவதிலிருந்தும், பிற்காலத்தில் ஆகாயம், தயை என்று தற்பவமாகப் பயன்பட்டது போல் அல்லாமல் ஆகாசம், தயா என்று தற்சமம் ஆளப் பட்டதிலிருந்தும் அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.

இவரது கணவன் முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவன் என்பது, அம்மையார் மாங்கனி வரவழைத்த போது அவன், ஈசன் அருள் எனக் கேட்டும் அது தெளியாது இருந்ததாலும், தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி அச்சமடைந்ததிலிருந்தும் அறிகிறோம். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்கள் அனைவருமே இந்தப் புதுமை கண்டு அஞ்சினார்களே அன்றி, இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.

சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக் கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்.

Sunday, October 3, 2010

காரைக்கால் அம்மையாரின் சிறப்பு

ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுவது எதனால்?

இறைவனிடமிருந்து மாங்கனி பெற்றது, பேயுடல் பெற்றது, கயிலை மலை மீது தலையால் நடந்து சென்றது ஆகிய அதிசயச் செயல்களைச் செய்ததாலா? அல்ல. இவற்றை விடப் பெரிய அதிசயச் செயல்கள் செய்த நாயன்மார் பலர் உளர்.

அம்மையாரை விடப் புலமையில் சிறந்தோரும், இவருடைய பாடல்களை விட அதிகமாக நெஞ்சம் உருக்கும் பாடல்களைப் பாடினோரும் உண்டு.

இவரை விட அதிகமாக இறைவனால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன் பக்தியை நிரூபித்தோர் பலர். இவர் தன் அழகைத் துறந்ததை விட மேம்பட்ட தியாகங்கள் செய்த சிவனடியார்கள் பலர். இவரை விட இறைவனிடம் அதிக நட்புக் கொண்டு பழகி உரிமையோடு ஏவல் கொண்டவரும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படாத சிறப்பு உரிமை இவருக்குக் கொடுக்கப்பட்டது என்றால் அதற்குக் காரணம்- இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான்.

இவள் நம்மைப் பேணும் அம்மை என்று சிவன் உரைத்ததாகக் கூறுவது உபசார வழக்கு. உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அம்மையார் தோன்றி இராவிட்டால் சமணமும் சாக்கியமும் தமிழ்நாட்டில் கோலோச்சி இருக்கும். வெளிநாடுகளில் புத்த சமயம் தாழ்ச்சியுற்ற வடிவத்தில் இன்று பின்பற்றப்படுவது போலத் தமிழ்நாட்டிலும் சமணம் சாக்கியம் என்ற சமயங்களின் பெயரை வைத்துக் கொண்டு மனம் போன வாக்கில் வாழும் ஒரு ஒழுங்கு முறை அற்ற சமுதாயம் ஏற்பட்டிருக்கும். அந்த அவக்கேட்டிலிருந்து தமிழ் நாட்டை மீட்டவர் அம்மையார். அப்பர் முதலானோர் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் சென்றார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார்.

சங்க காலத்தில் பல வகை நிலங்களிலும் வெவ்வேறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ஒரு வகை நிலத்து மனிதர் மற்றொரு வகை நிலத்தில் குடியேறாத காலம் அது. மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்ட பிறகு தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார். தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் வேதத்தைச் சார்ந்திருந்தார். வேதம் இந்திரன் வருணன் முதலான பல வேறு தெய்வங்களைப் போற்றுகிறது. ஆனால் வேதத்தின் மெய்பொருள் உணர்ந்தோரே, “ஒன்றுளதுண்மை, ஓதுவர் அறிஞர் பலவிதமாய்” (ரிக் 1.164.46) என்ற அதன் உயிர் நாடியை அறிவர். அம்மையார் வேதம் ஓதுதலைக் கடமையாகக் கொண்ட அந்தணர் மரபில் பிறக்கவில்லை, வேதத்தை அறிவு வழியில் ஆராய்ந்து உபநிடதங்கள் இயற்றிய அரச வம்சத்தில் தோன்றவில்லை. வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறித் தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அவர்.

சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். முருகனும், கணபதியும் வெவ்வேறு பகுதிகளில் தோன்றி இருந்தாலும் அவர்களைச் சிவனுடைய மகன்களாகப் போற்றுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்த சமயங்களின் வழிபாட்டிடங்களிலும் வழிபடுகிறார்கள் சைவர்களுக்கு இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார்.

சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் அம்மையார். இதுவே பிற்காலத்தில் பக்தி இயக்கமாக மாறியது. இது சைவத்தில் மட்டுமல்லாமல் பிற நாட்டுச் சமயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறைவன் எவ்வுருவினன், எத்தன்மையன் என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வையுங்கள், அவன் அஞ்சுதற்குரியன் அல்லன், தன் பெருமை தானறியா எளியவன். அவனுக்கே ஆட்பட்டவர்களாக இருங்கள். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் எதுவும் தேவை இல்லை. அவனிடம் அன்பு செலுத்துங்கள் போதும், உங்களுக்கு எதை வேண்டினாலும் தருவான் என்ற கருத்தைச் ‘சிக்’ எனச் (உறுதியாகச்) சொன்னவர் அவர்.

இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று உரக்க அறிவித்து அதுவரை மேல் மட்டத்தினருக்கு மட்டுமே உரிமையாக இருந்து வந்த சமயத்தை எளிமைப்படுத்திச் சாதாரண மக்களும் அதில் பங்கு கொள்ளுமாறு செய்தார்.