Pages

Friday, June 10, 2011

தமிழக அந்தணர்கள்

பொதுவாக அந்தணர் அனைவருமே ஆரியர்கள் என்றும், அவர்கள் அனைவரும் கைபர் போலன் கணவாய் வழியாக வட இந்தியாவில் நுழைந்து அங்கிருந்த திராவிடர்களைத் தென்னிந்தியாவிற்குத் துரத்தி விட்டார்கள் என்றும், பின் அங்கிருந்து அவர்களில் ஒரு பிரிவினர் தென்னாட்டிற்கும் வந்து குடியேறினார்கள் என்றும் ஆங்கிலேயர் தம் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக எழுதி வைத்த வரலாறு கூறுகிறது. இது ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருப்பதால் இதுவே பள்ளிப் பாட புத்தகங்களில் போதிக்கப்படுகிறது. இதைப் பொய் என்று நிரூபிக்கும் தற்கால ஆராய்ச்சி உண்மைகள் புதைக்கப்பட்டுவிட்டன. உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொள்ளாமல், நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் தமிழக அந்தணர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

இன்று தமிழ்நாட்டில் வாழும் பிராமணரில் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். பிற மொழி பேசுவோர் அனைவரும் அண்மைக் காலத்தில் அதாவது ஓரிரு நூற்றாண்டுக்குள் வேலையின் நிமித்தம் இங்கு வந்து குடியேறியவர்கள். அவர்களை நம் ஆய்விலிருந்து நீக்கி விடலாம். தமிழ் நாட்டில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அந்தணர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1 பூர்விகக் குடிகள்
2 குடியேறியோர்
3 புதிய அந்தணர்கள்

1 அ பூர்விகக் குடிகள் - தொல்காப்பியர் காலம்

தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71, பாயிரம்.]

1 ஆ பூர்விகக் குடிகள் - சங்க காலம்

சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக புறம் 43 உரைக்கிறது. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 அந்தணர்கள் ஓம்பும் முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் – தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் - வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகச் சிலர் கொள்வர். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல் வேண்டும்.

1 இ பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்

களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

1 இ 1 தீட்சிதர்கள்

நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

மற்றத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியர்கள் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் கற்று ஆகமத்தைப் பிரதானமாகக் கொண்டிருப்பது போல அல்லாமல், இவர்கள் வேதம் முழுமையும் கற்பவர்கள். அம்மையாரால் மயானத்தாடியாக வர்ணிக்கப்பட்ட ஆடற்பெருமானை அம்பலத்தில் ஏற்றி அவருக்கு வைதிக முறையிலான வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்விகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுவது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

1 இ 2 நம்பியார்கள்

சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பிராமணரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

1 இ 3 தென்கலை வைணவர்கள்

பழந் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

1 இ 4 ஆனைக்கா அந்தணர்கள்

திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்ட வைதிகப் பிராமணர்கள். அங்கு பின்பற்றப்படும் பூஜை முறையும் வித்தியாசமாக உள்ளது. இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும்.

1 இ 5 வீழி அந்தணர்

ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

1 இ 6 நயினார், பட்டர், திருசுதந்திரர்

திருவாரூரில் பூசை செய்யும் நயினார், பிரமராயர் திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர், மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்கள் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே.

களப்பிரர் கால அந்தணர்கள்

சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. அந்தணர்கள் பலர் இருந்த போதிலும் சைவத்தைச் சார்ந்த அந்தணர்கள் மட்டும் தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் என்று எண்ணிக்கையோடு சுட்டப்பட்டிருப்பதால் இவர்கள் சிறுபான்மையினர் என்றும் பெரும்பாலானோர் வைணவத்தைச் சார்ந்திருந்தார்கள் என்பதும் பெறப்படுகிறது.

சிவன் வேத தெய்வம் அல்ல என்பதாலும், வேத ருத்திரன் தவிர வேறு இரண்டு தோற்றுவாய்களிலிருந்து (சுடலை மாடன், சிந்துவெளியின் மகாயோகி) சைவம் உருவாக்கப்பட்டது என்பதாலும் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை அவர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

2 புதிய குடியேற்றம்

அம்மையார் காலத்துக்குப் பின் தமிழ் நாட்டில் பல முறை அந்தணர்கள் வடபுலத்திலிருந்து வந்து குடியேறினர். இவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில் குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வந்தவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

இந்த வடமர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?

அம்மையார் காலத்தில் இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் அப்பர் காலத்தில் ஏற்பட்டிருப்பதால் இவ்விரண்டு வழக்கங்களும் நிலவும் பிரதேசமான மராட்டியப் பகுதியிலிருந்து இவர்கள் வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மகாராட்டிரத்தின் கொங்கணக் கடற்கரையில் உள்ள சித்பாவன் பிராமணர்களின் தலை அமைப்பு, தமிழ் நாட்டில் சில அந்தணரிடையே காணப்படுகிறது என்ற நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றுக் கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டு அந்தணர்கள் இன்றளவும் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துவதிலிருந்து இவர்களது பூர்விக இடம் கொங்கணக் கடற்கரையில் நர்மதை கலக்கும் பகுதியான புரோச் மாவட்டமாக இருக்கலாம் என்பது தெரிகிறது.

இவர்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை. அப்படி இருப்பின் அந்தணர் அல்லாத பிறரும் வந்திருக்க வேண்டும். எனவே இவர்கள் அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும். சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சீரழியும் நிலையில் இருந்த சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

சோழ அரசர்கள் ஏன் நர்மதை நதிக்கரை அந்தணர்களைக் குடியேற ஊக்குவித்தனர் ? பாசுபத சைவம் தோன்றிய இடமான கார்வான் என்ற காயாரோகணம் இதற்கு அருகில் தான் உள்ளது. இந்த அந்தணர்கள் பாசுபதச் சைவத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சைவத்தை வளர்க்க விரும்பிய சோழர்கள் இந்தப் பாசுபதச் சைவர்களை விரும்பி இருக்க வேண்டும். சோழ நாட்டில் குடந்தை, நாகை ஆகிய இரு தலங்களும் வட தமிழ் நாட்டில் திருவொற்றியூரும் காயாரோகணத் தலங்களாகக் கூறப்படுவதிலிருந்து இவை இவர்கள் முதலில் குடியேறிய இடங்களாக இருக்க வேண்டும். இவற்றில் நாகையும் திருவொற்றியூரும் கடற்கரையில் உள்ளன. குடந்தையும் கடற்கரைக்கு அதிகத் தொலைவில் இல்லை. எனவே இவர்கள் கடல் மார்க்கமாக வந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

வடகலை வைணவர்கள்

புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் சில வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh.] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

குடியேறியவர்கள் சைவ மறுமலர்ச்சியில் பெரிதும் உதவி புரிந்தனர். ஆனால் அவர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி (மாலை வேளைகளில் வேத பாராயணம் செய்தல்) மட்டுமே.

3 புதிய அந்தணர்கள்

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் அந்தணராக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து சிவாசாரியர்கள் பிராமணர் அல்லர் என்பது பெறப்படுகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

கடம்ப நாட்டில் மயூரசன்மன் என்னும் மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள், பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்கள் தங்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர் – மு.நளினி, இரா.கலைக்கோவன்.]

பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார். [புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம். அதனால் பட்டஸ்ய எனப் பெயர் பெற்றிருக்கலாம். பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
************************************* ****************************************************