Pages

Thursday, August 1, 2013

தீக்குள் விரலை வைத்தால்




      பாரதியின் கவிதைகளைப் படித்துக் கொண்டே கண்ணயர்ந்தேன். கனவில் முண்டாசு தெரிந்தது. கம்பீரமான குரலில் பாட்டொலியும் கேட்டது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத்
தீண்டுமின்பம்  தோன்றுதடா நந்தலாலா

      அவர் பாடி முடித்ததும் நான் அவருடன் வார்த்தையாடத் தொடங்கினேன்.
     
      குருவே, வணக்கம். ஐயம் தீர்த்து விட வேண்டும். மிகைப்படுத்துவது என்பது புலவர்களுக்குள்ள உரிமை தான் என்றாலும், அது அளவுக்கு மீறலாமா?  தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? பொய்மை இகழ் என்று உபதேசித்த தாங்களே பொய் கூறலாமா?

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன் மானிடர்க்கே

      அப்படியானால் நீங்கள் அஞ்சாமல் தீக்குள் விரலை வைத்ததுண்டா?

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஒம் சக்தி ஓம் சக்தி ஓம்

      தீ தங்களைச் சுடுவதில்லையா? அல்லது தீமிதி மிதிப்பவர்கள் போல, சூட்டை உணராத அளவுக்கு உணர்ச்சி வேகம் அடைகிறீர்களா?

காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே

      தீயோ சுடுகிறது என்கிறீர்கள். சூடாகவும் குளிர்ச்சியாகவும் விளங்குவது தெய்வமே என்று தங்கள் மனம் நம்பினாலும் தீக்குள் வைத்த விரல் இரணமாகி விடுமே, இன்பமா தோன்றும்?

இரணமும் சுகமும் பழியும் நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்வேன்

      ஒரு விரல் இரணமாவது பற்றித் தாங்கள் பொருட்படுத்தாது இருக்கலாம். ஒரு புலி துரத்தி வந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவீர்களா, மாட்டீர்களா?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய்.

      தீயும் பராசக்தி, புலியும் பராசக்தி என்று தாங்கள் நம்பலாம். அதனால் அஞ்சாமல் இருக்கலாம். துன்பத்தைச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது எப்படி இன்பமாக இருக்கும்?

இன்பமாகி நின்றாய் காளி என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானுமுண்டோ?

      இந்த மனநிலை தங்களுக்கு எப்படி வந்தது?

சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்.

      சுருதி சொன்ன இக்கருத்தைச் சங்கரர் அத்வைதம் என்ற பெயரில் உபதேசித்ததாகச் சொல்கிறார்கள். நான் படிப்பறியாத பாமரன். எனக்குப் புரியும்படியாகத் தாங்கள் அதை விளக்கவேண்டும்.

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

      நான் வெறும் மண்ணாங்கட்டி. எந்த வித்தையும் அறியாத எளியேன். விண் போன்று உயர்நது நிற்கும் தங்களைப் போன்ற குருமார்களைத் தெய்வமாக நினைக்க என்னால் முடிகிறது. மற்றவற்றைத் தெய்வமாகக் கருத முடியவில்லையே.

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;

      நானும் தெய்வமா? ஆஹா, வானத்தில் பறப்பது போல உணர்கிறேன், கவியரசே.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

      கேட்கவே புல்லரிக்கிறது. நானும் தெய்வம், என்னைச் சூழ்ந்துள்ள உயிர்கள், பொருள்கள் யாவும் தெய்வம். இனி எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை, பகையும் இல்லை. அஞ்சுதல் இல்லை, கோபமும் இல்லை. கவலைகள், துன்பங்கள் மறைந்தன. அன்பு ஒன்றே எங்கும் நிரம்பி இருப்பதைக் காண்கிறேன்.

அன்பென்று கொட்டு முரசே அதில்
ஆக்கமுண்டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறும்
சூதுப் பிரிவுகள் போனால்

      என்னைப் புதிய உயிராக்கி எனக்கு
      ஏதும் கவலையறச் செய்து மதி
      தன்னை மிகத் தெளிவு செய்து
      என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்தீர்கள்

      நன்றி, குருவே, மீண்டும் வணங்குகிறேன். 

செய்க தவம்




      எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி காட்டும் வழி என்ன?

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்

                தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம். துருவன், பகீரதன், அர்ஜுனன் முதலானோர் தவம் செய்து விரும்பியதை அடைந்தனர். அவர்களைப் போல நாமும் கானகம் சென்று கனி கிழங்குகளைப் புசித்து நீரிடையேயும் நெருப்பிடையேயும் ஒற்றைக் காலில் நின்று இரவு பகல் விடாது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டுமா? (தவம் என்றால் இப்படித் தான் என்று கேட்டு வந்திருக்கிறோம்.) அப்படிச் செய்வதற்கு வேண்டிய மனத் திண்மை நம்மிடம் இல்லை.

      அஞ்ச வேண்டாம். எளிமையான தவம் ஒன்று இருக்கிறது. அது தான் அன்பு செய்வது. வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறார் பாரதி. இது எளிமையானது மட்டுமல்ல, முனிவரின் தவத்தை விட மேம்பட்டதும் ஆகும்.

துறந்தார் பெருமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந் தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே.
     
      எளியோரைக் காத்து உணவளித்து நல்லோர் வாழ்க என இறைவனிடம் வேண்டுவது, இல்லறம் துறந்து கானகம் சென்று முனிவர் செய்யும் தவத்தை விட மேம்பட்டது ஆகும் என்கிறார் பாரதி.
       
      மிக எளிதான வழியாக இருக்கிறதே, எல்லோரும் இவ்வாறு அன்பு செய்வதன் மூலம் எய்த விரும்பியதை எய்தி விடலாமே.

      இதைப்  பாரதி மற்றோரிடத்திலும் கூறுகிறார்.

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

      அன்பு செய்து கொண்டிருந்தால் போதும். உழ வேண்டாம், விதை போட வேண்டாம். எல்லாப் பயிர் வகைகளும் செழித்து ஓங்கும்.

      வள்ளுவரும் இதையே கூறுகிறார், விருந்தோம்பி விட்டு மீதி இருப்பதைப் புசிப்பவன் தன் நிலத்திற்கு விதையே போட வேண்டாம், விளைந்து விடும்.

      விவிலியமும் ஏசுநாதர் கூற்றாக இதைக் கூறுகிறது-
     
      என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.

      ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதும் இல்லை, அறுக்கிறதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.

      இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கும் கூடக் கொடுக்கப்படும்.

      கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உழைக்காமல் தேவனுடைய நீதியைத் தேடி அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு கிடைக்கும் என்று நம்புவதற்கு நம்முடைய அனுபவமும் பகுத்தறிவும் இடையூறாக உள்ளனவே?

      ஏசுநாதர், வள்ளுவர், பாரதி கூறியபடி உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வேண்டுமானால் வளரலாம். ஆடைகள், வீடுகள் தானாகவே முளைக்குமா?

      மீண்டும் பாரதியிடமே போவோம். அன்பே தவம் என்று சொன்ன பாரதி வேறோரிடத்தில் தவமே யோகம், யோகமே தவம் என்கிறார். அதாவது அன்பு, தவம், யோகம் இவை ஒரு பொருள் சொற்கள். யோகத்தை விளக்குகிறார்
     
      ஊருக்கு உழைத்தல் யோகம்.

      அன்பு செய்தல் என்றால் ஊருக்கு உழைத்தல் என்பது பொருள். ஊருக்காக உழைத்தால் அது உழைப்பாகத் தோன்றாது, உடலை வருத்தாது. தன்னலமின்றிப் பொதுப்பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும். 

      பாரதியியால் பெரிதும் போற்றப்பட்ட பகவத்கீதையின் இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.

யக்ஞ சிஷ்டாசின: ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பச்யந்த்யாத்ம காரணாத்

      யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். எவர் தமக்காகச் சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தை உண்கின்றனர்.

      இங்கு யாகம் எனப்படுவது பிறர் நன்மைக்காகச் செய்யப்படும செயல்களைக் குறிக்கிறது. எனவே உழைக்கத் தான் வேண்டும், ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக என்பதே பாரதியின் கொள்கை என்பதை அறிகிறோம். இது தொடர்பாக வினோபா கூறுகிறார் தாய் குழந்தைக்கு வேண்டிய போஷணையைச் செய்கிறாள். நான் என்ன செய்து விட்டேன் ஒன்றுமே செய்யவில்லையே, எனக்கு இது ஒரு பாரமா என்று அவள் கேட்கிறாள். மனிதன் இதய பூர்வமாய்க் கர்மம் செய்கையில் வேதனை, கஷ்டம், ஆயாசம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.

      பிறர் நலனுக்காக உழைக்கும்போது உடம்போ மனமோ பாதிக்கப்படுவதில்லை, எனவே அது உழைப்பே அல்ல.


      எனவே அன்பு செய்யுங்கள். சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனக் கருதி எல்லாவற்றிடத்தும் அன்பு செய்யுங்கள்.  பிறர் நன்மை மட்டும் கருதி உழையுங்கள். உங்கள் வயிற்றுப் பாட்டை இறைவன் கவனித்துக் கொள்வான்.  ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுவே தவம். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் வழியும் அதுவே. 

மோதி மிதித்துவிடு பாப்பா




      பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

பாதகம் செய்பவரைக் கண்டால்நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

      அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

      இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

      பாதகம் செய்யும் மனிதரைத் தண்டிக்க வேண்டுமாம். பாதகம் செய்யும் புலியைத் தண்டிக்காதது மட்டுமல்ல, அதைக் கும்பிடவும வேண்டுமாம். சாதிக்கொரு நீதியா? மகாகவியின் வாக்கில் முரண்பாடா ?

      இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

      தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

      ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

      ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

      தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

      எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.


      இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம். 

பேயவள் காண் எங்கள் அன்னை




      புதுவையை வாழிடமாகக் கொண்ட பாரதி அதன் தொலைத் திட்டுப் பகுதியான காரைக்காலுக்கு வந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையாரின் பாடல்களை அவர் படித்திருக்கக் கூடும். ஆனால் அவர் அவர் கம்பன், இளங்கோ, வள்ளுவன் தவிரப் பிற புலவர்களையோ எந்த ஒரு நாயன்மாரையோ போற்றியதில்லை. என்றாலும், பாரதியின் ஒரு குறிப்பிட்ட பாடல் அம்மையாரைப் புகழ்ந்து பாடப்பட்டதோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. வெற்றி கொண்ட தாய் என்ற தலைப்பிலான பாடலின் முதல் நான்கு பாக்களைப் பாருங்கள்.

பேயவள் காண் எங்கள் அன்னை பெரும்
பித்துடையாள் காண் எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை

இன்னிசையாம் இன்பக் கடலில் எழுந்
தெற்றும் அலைத் திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அன்னை.

தீஞ்சொற் கவிதை யஞ்சோலை தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி மதுத்
தேக்கி நடிப்பவள் எம் அன்னை.

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை
வேல் கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்
தோதி உலகெங்கும் விதைப்பாள்.

      பேய்க் கோலத்தை விரும்பி ஏற்றவர் அம்மையார். பேயாடும் கானில் பிறங்கக் கனலேந்தித் தீயாடும் பெம்மான் மேல் அவருக்குக் காதல், பிறந்து மொழி பயின்ற போதே ஏற்பட்டுவிட்டது. இக் காதல் கசிந்து பெருகிக் கடலென மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்ததால், மணிவாசகர் கூறுவது போல, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்பதில் முடிவடைந்தது. அவரது பாடல்களில் இறைவனிடம் ஆரா அன்பு, பணிவு, வியப்பு, பெருமகிழ்வு, நகைச்சுவை என்று பல்வேறுபட்ட உணர்ச்சிகள் கணத்துக்கு கணம் மாறி மாறி வருவதைக் காண்போர் இவர் பித்துக் கொண்டவர் என்று கருதியதில் வியப்பு என்னே!

      தமிழிசையின் முன்னோடி அம்மையார். ஆலங்காட்டில் அப்பன் ஆடும் ஆட்டத்தை விவரிக்கப் புகுந்த அவர் பல இசைக் கருவிகளைப் பட்டியலிடுகிறார். இன்றைய ஸரிகமபதநி- க்கு இணையான தமிழ்ச் சுரப் பெயர்களான துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகியவற்றை நாம் அறிய உதவும் பழைமையான நூல் அவரது பாடல்களே. எனவே அவர் இசையில் புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பதை நாம் ஐயமின்றி ஊகிக்கலாம்.  இறைவனின் பேயாய நற்கணத்தில் ஒன்றாய அவர் இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துப் பாடிய பாடல்கள் அவர் தாவிக் குதித்து ஆடியதை நம் கண் முன் கொண்டு நிறுத்துகின்றன.

      அம்மையாரின் கவிதைச் சிறப்போ சொல்லொணாதது. அதில் இல்லாத சுவை இல்லை. இல்லாத அணி இல்லை. அவரது பாடல்கள் அத்தனையும் தெய்விக நன் மணம் வீசும் தேன் சொரி மாமலர்களே, ஐயமில்லை.

      வேதியனை, வேதப் பொருளானை, வேதத்திற்கு ஆதியனைப் புகழ்ந்து அவர் பாடிய பாடல்கள் சாதாரண மக்கள் எளிதில் கற்க முடியாத ஓதரும் சாத்திரம் கோடியின் உண்மையை எளிமைப் படுத்தித் தருகின்றன. ஏழைகளே, எந்தை அராப் பூண்டு உழலும் அம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறம் எளியது தான், வாருங்கள் என்று கூவி அவர் பக்தி விதைகளை உலகெங்கும் விதைக்கிறார்.
     
      இந்த நான்கு பாடல்களும் பாரதி அம்மையாரைத் தான் பாடி இருப்பாரோ என்று மயக்கம் தந்தாலும் ஐந்தாவதாகிய நிறைவுப் பாடல் நம்மை அதிலிருந்து மீட்கிறது.

பாரதப் போரெனில் எளிதோ விறற்
பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடி வந்தாலும் கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.


      சந்தேகமில்லை. பாரதி குறிப்பிடுவது பாரத அன்னையைத் தான். என்றாலும் நமக்கு அம்மையாரைப் பற்றிச் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அல்லவா?

நையப் புடை



                                                           
      மகாகவி பாரதி வேதங்களைப் பொருளுணர்ந்து கற்றவர் என்றும் அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்தவர் என்றும் கண்டோம். ஆனால் நான் பெற்ற அத்வைத இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. வேதாந்தம் என்பது அதற்கு உரிய தாகமும் வயதும் சூழ்நி்லைகளும் வாய்க்கப் பெற்றோருக்கு மட்டுமே உரியது. மற்றவர் உலகக் கடமைகளிலிருந்து தப்புவதற்காக வேதாந்தத்தில் புகுந்து ஒளிந்து கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்து.

      எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

      வயதான பிறகு கடோபநிஷத்தையும் சுந்தர காண்டத்தையும பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று கூறின பாரதி இளைஞர்களுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் கூறும் அறிவுரைகள்  அவரது புதிய ஆத்திசூடியில் உள்ளன. மற்ற விஷயங்களில் புதுமை செய்தது போல, வேதாந்தத்தையும் உலகியலையும் ஒருங்கே போற்றியதன் மூலமும் பாரதி புதுமை செய்துள்ளார்.

      அவருடைய புதிய ஆத்திசூடியில் காணப்படும் நையப் புடை என்ற வாசகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம்! அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.
           
      பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது யாரை நையப் புடைக்கக் கூறுகிறார்?

            பாரதியை முழுமையாகப் படித்தால் இதன் உட்பொருள் தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப் புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

            பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

            பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
            பயம் கொள்ளலாகாது பாப்பா,
            மோதி மிதித்து விடு பாப்பா அவர்
            முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.
           
            பாரதியாரின் அச்சமில்லை பாட்டு பிரசித்தமானது.

                இச்சகத் துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
                அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

                மற்றவர்கள் தன்னைத் துச்சமாக எண்ணித் தூற்றினாலும், பொருள் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், வேசையர் வலை வீசினாலும், நண்பரே துரோகம் செய்த போதிலும், பெரும் படை தன்னைக் கொல்ல வந்து நின்றாலும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிறார்.

                அச்சத்தை அழித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வே கிடைக்குமாம்.

                நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
                அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
                அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

                மனிதருக்கு இயல்பாக ஏற்பட்ட அச்சத்தை நீக்கித் தனக்கு அருள வேண்டும் என மகாசக்தியை வேண்டுகிறார்

                ஐயம் தீர்த்து விடல் வேண்டும் புலை
                அச்சம் போயொழிதல் வேண்டும்
               
                மகாசக்தியின் பாதங்களைச் சரணடைந்து விட்டதால் தன் அச்சம் நீங்கிவிட்டதாகக் கூறி மார் தட்டுகிறார் கேளுங்கள்.
               
      மரணமும் அஞ்சேன் நோயினை அஞ்சேன்
                மார வெம்பேயினை அஞ்சேன்
     
            அக்கால மக்களின் கோழைத்தனத்தைப் பார்த்து,
           
            அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
            அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

            நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்
           
      காலா என் காலருகே வாடா
            சற்றே உனை மிதிக்கிறேன்
என்றும்
            யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே
            உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை
என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

            தொன்மைக்கு அஞ்சேல்
            கீழோர்க்கு அஞ்சேல்
            தீயோர்க்கு அஞ்சேல்
            பேய்களுக்கு அஞ்சேல்

      தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.
           
      ஆறுவது சினம், நயம்பட உரை ஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

            ரௌத்திரம் பழகு
            வெடிப்புறப் பேசு
            கொடுமையை எதிர்த்து நில்
            சீறுவார்ச் சீறு
என்ற வாசகங்களாலும்

            தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
            நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா
என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது!

                ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் அச்சம் தவிர்த்து வாழ வேண்டும் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார்.

                நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
                ஞான நல்லறம் வீர சுதந்திரம்
                பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.

            நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

            உடலினை உறுதி செய்
            ஊண் மிக விரும்பு
            இளைப்பது இகழ்ச்சி என்றும்

            அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

            அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

            நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

            காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.

            நமது மூன்றாவது எதிரி மௌட்டியம் (மூடத்தனம்). அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்-- அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

            சோதிடம் தனை இகழ்
            தொன்மைக்கு அஞ்சேல்
            பிணத்தினைப் போற்றேல்
            புதியன விரும்பு
            மௌட்டியம் தனைக் கொல்
            வேதம் புதிது செய்

            நமது நாலாவது எதிரி சோம்பல்.

            ஓய்தல் ஒழி
            நாளெல்லாம் வினை செய்
            யவனர் போல் முயற்சி கொள்
            கெடுப்பது சோர்வு என்றும்
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர்
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.

                அச்சத்தை ஒழிக்கவேண்டும், வலிமையைப் பெருக்க வேண்டும்  என்ற எண்ணம் பாரதிக்கு எப்படி ஏற்பட்டது? சந்தேகமில்லாமல் வேதத்திலிருந்து தான். இது தொடர்பாக விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.

                “வலிமை, வலிமை-இதுதான் உபநிடதத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறும் செய்தி. நினைவில் வைக்க வேண்டிய ஒரு பெரும் விஷயம் இதுவே. என் வாழ்க்கையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட மிகப் பெரும் பாடம் இதுவே. உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.

                “ஆம், உலகிலேயே அபீ: (பயப்படாதே) என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிஷத் ஒன்று தான். உலகின் வேறு எந்த சமய இலக்கியத்திலும் கடவுளின் தன்மையாகவோ மனிதனின் தன்மையாகவோ அச்சமின்மை கூறப்படவில்லை.

                “உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோத- எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதே. இளைஞர்களே, எழுந்திருங்கள், விழியுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. வாய்ப்புகள் நம் கண் முன்னே விரிந்து தயாராகக் காட்சி தருகின்றன. தைரியமாக இருங்கள். அஞ்சாதீர்கள். நம்முடைய சமய இலக்கியத்தில் மட்டும் தான் அச்சமின்மை என்ற சொல் ஆண்டவனின் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் அச்சமற்றவர்களாக ஆக வேண்டும். வேலை முடிந்துவிடும்.

                “உண்மையான வேதாந்தி ஆவதற்கு முதல் படி அச்சமற்று இருக்க வேண்டும். பலவீனம் தொலைய வேண்டும். இது மிகவும் கடினம் தான். உலகப் பற்றை முற்றிலும் துறந்தவர்கள் கூடச் சில சமயம் மனதின் அந்தரங்கத்திற்குள் பலவீனத்தை உணர்வார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சராசரி மனிதனைப் பற்றிக் கேட்பானேன்? அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஆயிரம் ஆயிரம் விஷயங்களுக்கு அடிமையாகப் பயந்து பயந்து வாழ்கின்றனர்.”

      பாரதியின் அச்சமில்லை என்ற பாட்டுக்கும், வலிமை கொண்ட தோளினாய் வா வா வா என்ற வரிகளுக்கும் வேர் எங்கிருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?


            வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்--அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.