Pages

Wednesday, December 18, 2013

ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?




       விதியா, மதியா?  இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்         

என்று விதியின் வலிமை பேசிய அவர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்  

என்று முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

       இது பற்றிப் பாரதியின் கருத்து என்ன? அவரது பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம்.

       பாரதப் போராகிய பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் எல்லோருமே பலி ஆகிறார்கள். பாண்டவரைச் சூதாட அழைக்கப் போகிறேன் என்றும் அதற்குத் தந்தை இணங்காவிட்டால் உயிர் விடுவேன் என்றும் துரியோதனன் மிரட்டுகிறான். பிள்ளை மீதுள்ள பாசத்தால் அவனுடைய சதித் திட்டத்திற்கு வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க நேர்ந்த போது திருதராட்டிரன் கூறுகிறான்,

'விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வார் புவிமீ துளரோ?
............
'விதி! விதி! விதி! மகனே! –இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்,' என்று
வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.

       விதுரனுக்கு வருங்காலம் தெரிகிறது. ஆனால் அவனாலும் துரியோதனனின் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அவனுடைய ஆலோசனைகள் நலம் பயப்பவை என்று அறிந்தும் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் திருதராட்டிரனின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதை உணர்ந்து, திருதராட்டிரன் கூறுகிறான்,

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
'
சென்று வருகுதி, தம்பி இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளி'தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.

       அண்ணன் கூறியபடி விதுரன் துரியோதனனுடைய அழைப்பில் சூழ்ச்சி உள்ளது என்பதைத் தருமனுக்குத் தெரிவிக்கிறான். தருமனோ, ஆபத்து வரும் என்று அறிந்தும், தந்தை அழைத்திருக்கும் போது போகாமல் இருப்பது தவறு என நினைக்கிறான். தந்தையே சூழ்ச்சி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தும், தம்பிகள் தடுத்தும் தருமன் தன் மனதை மாற்றிக் கொள்ள வில்லை. துன்பம் வரும் என்ற அச்சத்தால் கொள்கை தவறுவது சான்றாண்மை ஆகாது என்று கருதுகிறான். இது விதியின் செயல் என்று அழைப்பை ஏற்றுக் கொள்கிறான்.

'இங்கிவை யாவுந் தவறிலா-விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ?
.........
                           ........நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர்.
       ஊரை விட்டுப் பாண்டவர் தங்கள் துன்பக் களம் நோக்கிச் செல்கையில் கவிக் கூற்றாக வருவது விதியின் வலிமை பற்றிய இக்கருத்து.

நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;
கீழ்மேலாம், மேல் கீழாம்; கிழக்கு மேற்காம்;
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார், விதிவகுத்த போழ்தி னன்றே.

       சூதாட்டத்தில் தான் தோற்று விடுவோம் என்பது தருமனுக்குத் தெரிகிறது. என்றாலும் சூதாட அழைக்கப்படும்போது மன்னர்கள் மறுக்கக் கூடாது என்ற மரபை அவன் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வேறு வழியின்றி சூதாட அவன் இணங்குகிறான்.

வெய்ய தான் விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;

       இவ்வாறு பாஞ்சாலி சபதக் கதை முழுவதும் அறிஞர்கள், நல்லவர்கள் பலர் வர இருக்கும் பேரழிவை உணர்ந்தும், உணர்த்தியும் தடுக்க முடியாமல், ஒவ்வொரு நிலையிலும் போரை நோக்கிக் கதை நகர்வதைக் காணும்போது விதியின் வெல்லவொண்ணா வலிமை புலப்படுகிறது.

       இதைக் கொண்டு பாரதி விதியை நம்பினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது வியாசர் கூறியதன் மொழிபெயர்ப்பே என்று முன்னுரையில் அவரே கூறுவதால் இது வியாசருடைய கருத்தே அன்றிப் பாரதியின் கருத்து அல்ல என்று அறியலாம்.

        ஆனால் தன் சுய சரிதையில் ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ? என்று அவர் கேட்கும்போது விதி வலியது, வெல்ல முடியாதது என்று அவர் நம்பியதை உணர முடிகிறது.

        ஆம். பாரதி விதியின் வலிமையை உணர்ந்திருந்தார். அது இறைவனின் மந்திரி என்று அவர் கூறுகிறார். கண்ணனைத் தந்தையாக உருவகித்த பாடலில்,
       
                                - ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

        செய்த தவறுக்குத் தண்டனையாகத் துன்பத்தை தனது மந்திரியாகிய விதி தரும்போது இறைவன் குறுக்கிடுவதில்லை.

நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

        ஆனால் பாரதி பாடிய பாடல்களில் விதிக்குக் கட்டுப்பட்டு வாளா இராமல் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கஞ்சி குடிப்பதற்கிலாத நிலையில் அதன் காரணங்களை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபடாத எளியோரைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார். துன்பம் வரும்போது இது விதிவசத்தால் வந்தது, எது வரினும் அனுபவித்தே தீருவேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருத்தல் தகாது என்பதைக் காட்டும் அறிவுரைகள் பல அவருடைய ஆத்திசூடியில் உள்ளன.    
 
கொடுமையை எதிர்த்து நில்.
சீறுவோர்ச் சீறு. 
செய்வது துணிந்து செய்.  
சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
தேசத்தைக் காத்தல்செய். 
நாளெலாம் வினைசெய்.
பணத்தினைப் பெருக்கு.
 மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
 முனையிலே முகத்து நில்.
 யவனர்போல் முயற்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரௌத்திரம் பழகு.
லௌகிகம் ஆற்று.
வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வையத் தலைமைகொள்

        பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி தெருவில் இழுத்துச் செல்லப்படும்போது மக்கள் அதைத் தடுக்க முயலாமல் புலம்பினர் என்று அவர்களை இகழ்கிறார்.

ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?
வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே,
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ''?

        விதியின் பேரில் பழியைப் போட்டு விட்டு முயற்சியின்றி இருப்பவர்களை இறைவன் இகழ்வான் என்றும் அன்பு செய்தால், அதாவது பிறர் துயர் நீக்க முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குப் பலன் கொடுப்பான் என்றும் கூறுகிறார்.
துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத் 
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; 
அன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம் 
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; 
       விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

       ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நி்யமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

வெற்றி செயலுக்குண்டு, விதியின் நியமம் என்று
கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ?

       ஆனால் சில சமயங்களில் முயற்சி பலன் தராமல் போவதும் உண்டு.
      
                     ...........   கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்
முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும்
ஏழ்கடல் ஓடியுமோர் பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
உண்டு.

       அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி என்பதால் இறைவனைச் சரணடைக என்கிறார் பாரதி. இறைவனிடம் பக்தி செய்தால் நிச்சயம் பலனுண்டு. உண்மையான பக்தியின் மூலம் துன்பங்கள் யாவும் நீங்கும். முன்னைத் தீய வினைப் பயன்கள் இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் என்று வேண்டினால் திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம். கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை. அதற்கு அடிப்படையாக கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

       அப்படியும் துன்பம் தொடருமானால், சக்தி சோதனை செய்கிறாள் என்று உணர்க. பொறுமையுடன் இரு. நம்பிக்கை இழந்து பக்தியை விட்டு விடாதே. அவள் நிச்சயம் காப்பாள் என்ற சொல்லே துயர் போக்கும்.

சக்தி சில சோதனைகள் செய்தால்  அவள்
தண்ணருள் என்றே மனது தேறு

பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்

வையகத்துக்கில்லை, மனமே, நினக்கு நலம்
செய்யக் கருதி இவை செப்புவேன்- பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற
சொல்லால் அழியும் துயர்

       பாரதியின் இவ்வழி வேதத்தையும் கீதையையும் ஆதாரமாகக் கொண்டது. பக்தி நெறி வேத நெறிக்கு விரோதமானது அல்ல. அறியாதார் சிலர் வேதம் என்பது வேள்வி முறையை மட்டுமே கொண்டதென்றும் பக்தி என்பது வேதச் சார்பு இல்லாத வழி என்றும் கூறுவர். இவர்களுக்குப் பாரதி பதில் கூறுகிறார். 
      
       வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது, விக்கிரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது, அத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. ....சரணாகதியே வழி. வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

       கீதையில் கண்ணனின் உபதேசமாகப் பாரதி கூறுகிறார், பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான், பக்தி பண்ணிப் பிழைக்கச் சொன்னான்.

       இவ்வாறு விதி வலியது என்பதை உணர்ந்தாலும், பக்தியின் மூலமும் முயற்சியின் மூலமும் அதைப் புறங்காண முடியும்  என்று நம்புவதே வாழும் நெறி என்று பாரதி வழிகாட்டுகிறார்.

       இந்தப் பக்தி நெறியே பாரதியின் பாடல்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.